காமிக்ஸ் அன்பர்கள் சமூகத்திற்கு வணக்கம்.
சென்ற பதிவாக வெளிவந்த ராணி காமிக்ஸ் முதல் இதழ் நினைவுகூறல் நண்பர்களிடையே சரியான வரவேற்பை பெற்றதில் மிக மகிழ்ச்சி. வழக்கம் போல உங்கள் கருத்துகளுக்கு என் பதிலை அங்கு படிக்கலாம். ஏற்கனவே தாமதமாக தயாராகிய இரண்டாம் இதழ் விருந்து, கெட்டு போகும் முன் சுவைத்து விடலாம்.
சுட்டெரிக்கும் வெயில் இந்திய நகரங்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் தருணத்தில், சூரியனின் வெப்ப பார்வையில் தகிக்கும் பாலைவனத்தை மையமாக கொண்டு வெளிவந்த இந்த கவ்பாய்* சித்திரகதையை நினைவுகூர்வது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். (சரி சரி, ஏற்கனவே தாமத பதிவு அதற்கு சப்பை கட்டு வேறயா என்று கூறுவது கேட்கிறது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா)
* Cowboy என்ற சொல்லுக்கு “மாட்டு பையன்” என்று கூறலாம் என்றாலும், அவ்வார்த்தைக்கு நம் நடைமுறையில் அர்த்தம் சரி வராது என்பதால் கவ்பாய் என்றே அழைப்போமே?
#2: பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர்!கவ்பாய் சாகஸம் - 15 ஜுலை 1984 | அமெரிக்க வரலாற்றில் கவ்பாய் சாகச வீரர்களுக்கு ஒரு மிக பெரிய பங்கு உண்டு. பூர்வ குடிமக்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் இடங்களில் ஆக்ரமிப்பு செய்து, ஒரு அரசாங்கத்தை கட்டி காப்பாற்ற அவர்களுக்கு பக்க பலமாக இருந்தது, இந்த குதிரை ஓட்டிகள்தான். நாட்டை காப்பாற்ற போர்கள வீரர்கள் என்றால், சட்டத்தை நிலை நாட்ட அவர்கள் நம்பியது ஷெரீப், மார்ஷல் என்ற பதவிகளுக்கு அவர்கள் நியமித்த கவ்பாய் வீரர்களையே. மார்ஷல் என்பவர் மாநிலங்களின் தலைவராக செயலாற்றும் போது, அவருக்கு உதவியாக பிராந்தியங்களின் காவல் தலைவராக ஷெரீப் செயல்படுவார். |
மக்களுடன் ஒன்றி அவர்களை சட்டத்திற்குப்பட்டு காரியம் ஆற்ற செய்வது அவர்களின் தலையாய கடமையாய் இருந்தது.
ஜேம்ஸ் பாண்ட் கதைகளை மட்டும் வைத்து காலம் ஓட்ட முடியாது என்று புரிந்து கொண்ட ராணி நிர்வாகம், தங்கள் முதன்மை கதாநாயகனின் சாகசங்களிடையே இடை சொருகலாக உபயோகபடுத்த தேர்ந்தெடுத்தவையே கவ்பாய் கதைகள்.
இப்படிபட்ட கதைகளத்தை கொண்டிருந்த அந்த கவ்பாய் காலகட்டத்தை ஒட்டி தீட்டபட்ட பல கதைகளிள் ஒன்றே, இந்த “பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்” என்ற ராணி காமிக்ஸின் இதழ். இனி கதையை அலசுவோம்.
சூரியனின் வெப்ப பார்வையில் குளித்து கொண்டு, கண்ணுக்கு எட்டும் தொலைவுமட்டும் மண் குன்றுகளும், கள்ளி செடிகளும் நிறைந்த ஒரு மொட்டை பாலைவனத்தில், இரு உருவங்கள் மெதுவாக தங்கள் குதிரையில் சவாரி செய்த படியே அறிமுகமாகின்றனர். அவர்களில் ஒருவர் பிராட் பிளின்ட். சில்வர் பெண்ட் என்ற பிராந்தியத்தின் ஷெரீப் பொறுப்பில் காரியம் ஆற்றி கொண்டிருப்பவர்.
அவருடன் சக பயணியாக-கைதியாக, பயணிக்கும் ஆசாமி, நிக் மன்றோ. கிட்டதட்ட 30க்கும் அதிகமான கொலைகளை செய்த படு பாதகன், 19 வயதே நிரம்பியவன் என்பது இன்னொரு கொடுமை. குற்றவாளி என்று பட்டம் கட்டபட்ட அவனை, சலிணா பால்ஸ் என்ற நகரத்தில் உள்ள மார்ஷல் ஆபிஸில் ஒப்படைக்கவே இந்த நெடிய பயணம்.
அந்த சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே கூட நிக்கின் முகத்தில் இருந்த வெறுப்பு சற்றும் குறையவில்லை. தன்னை காப்பாற்ற அவன் அண்ணன்கள் பார்ட்டும், கெப்பும் கட்டாயம் வருவார்கள் என்று ஷெரீப்பை மிரட்டி பார்க்கிறான்.
உன்னை விட பெரிய கொலையாளிகள் அவர்கள் கிடையாது, எனவே நீ அடக்கி வாசிக்கலாம் என்று ஷெரீப் கடுமையாக கூறி அவன் வாயை அடைப்பதின் மூலம் ஷெரீப் தன் ஆளுமைய நிரூபிக்கிறார்.
அடங்கி ஒடுங்கும் நிக், வெறு வழியின்றி வெறுப்புடன் அவரை தொடர்கிறான். சற்று தூரமே சென்றிருக்கையில், ஆள் அரவம் இல்லாத அந்த பிராந்தியத்தில் எதிரொலிக்கும் துப்பாக்கி சத்தம் அவர்கள் கவனத்தை திசை திருப்புகிறது.
மிகுந்த கவனத்துடன் ஒரு குன்றின் மீதிருந்து நோட்டம் விடும் ஷெரீப் கீழே பள்ளத்தாக்கில் செவ்விந்தியர்கள் ஒரு சாரட்டு வண்டியை சூரையாடி கொண்டிருக்கும் அக்கிரமத்தை காண்கிறார்.
நிக்கை ஒரு கற்றாலையுடன் பிணைத்து விட்டு, தன் உயிரினையும் பொருட்படுத்தாது, அந்த வெறி பிடித்த கும்பலின் நடுவே சீற்றத்துடன் புகுந்து, வண்டி காவலாளியுடன் கைகோர்த்து போராடுகிறார்.
எண்ணிக்கையில் அதிகமான செவ்விந்தியர்களிடம் வீழ்வது உறுதி என்று நினைத்து கொண்டிருக்கையில் ஆபத்பாந்தவன் போல வந்து சேருகிறார்கள் ரோந்து படை வீரர்கள். வீரர்களை கண்ட மாத்திரத்தில் செவ்விந்தியர்கள் சிதறி ஓடி போக, ஒரு வழியாக அந்த போராட்டம் நிறைவடைகிறது.
வண்டியில் இருந்து வெளிவரும் வாரன் என்ற கணவான், அவரின் அழகு மனைவி லாரா
(அது எப்படி கணவான்களுக்கெல்லாம் அழகிய மனைவிகளே கிடைக்கிறார்கள் என்ற ரகசியத்திற்கு யாராவது பதில் கூறினால் தகும்), சகிதம் ஷெரீப்பின் உதவிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறார், கூடவே அவர்களும் சலீனா பாக்ஸுக்கு தான் பிராயணம் செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
ஆனால், இனியும் இந்த பிராந்தியத்தில் வண்டி ஓட்ட போவதில்லை என்று கூறி வண்டியோட்டி விலகி கொள்கிறான்.
வாரனின் கெஞ்சலுக்கு பிறகு, வேறு வழியில்லாமல், ஏற்கனவே ஒரு கைதியுடன் பயனித்து கொண்டிருந்தாலும், இவர்களையும் துணை பயணிகளாக கொண்டு செல்ல ஒப்புக்கொள்கிறார் ஷெரீப்.
ஆனால், வழியில் செவ்விந்தியர்கள் தொந்தரவில்லாமல் பயணிக்க பாலைவனத்தின் ஊடே செல்வது தான் சிறந்தது என்று கூறி கடினமான பயணத்திற்கு அவர்களின் ஒப்புதலை நல்கி கொள்கிறார்.
பிரயாணத்திற்கு தேவையான தண்ணீர் மற்றும் குதிரைகள் ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பும் வேளையில், லாராவும் வாரனும் தங்களுக்குள் இந்த பயணம் தேவைதானா என்று வினவி கொள்கிறார்கள். வாரனின் கருத்த முகம் அவர்கள் ஏதோ உண்மையை ஷெரீப்பிடம் இருந்து மறைக்கிறார்கள் என்று பறை சாட்டுகிறது. ஆனாலும் லாராவின் வற்புறுத்தலின் பேரில், அந்த நால்வர் கூட்டணி பாலைவனத்தின் ஊடே தங்கள் நெடிய பயணத்தை தொடர்கிறது.
எதிர்பார்த்தபடி அந்த கடிய பயணத்தில் நால்வர் கூட்டணி தவித்து போய் விடுகிறார்கள். நடுவில் நிக்கின் ஏளன பேச்சு ஷெரீப்பை கடுப்பேற்றினாலும், தன் கடமையை நினைத்து அவர் பொறுமை காக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தண்ணீரும் தீர்ந்து போய் அவர்கள் வெயிலில் தவிக்கும் சூழல் உருவாகிறது.
அப்போது ஷெரீப் 15 மைல் தொலைவில் ஒரு ஊற்று இருப்பதாக கூற, ஆவலுடன் அதை தேடி, நடைபிணமாக தொடருகிறார்கள்.
பாதி உயிருடன் தட்டு தடுமாறி அந்த ஊற்றை அவர்கள் சென்றடையும் போது விதி அங்கு வறண்ட ஊற்றுகண்ணாக அவர்களை பார்த்து சிரிக்கிறது.
இக்கட்டத்தில் நமது பொறுப்பாசிரியரான திரு.ராமஜெயத்தின் மொழி பெயர்ப்பை பாருங்கள். வெயிலின் கொடுமையை கவிதை வரிகளின் பிரதிபலித்திருப்பார். போற்றபட வேண்டிய விஷயம்.
நா வறண்டு கிடக்கும் நால்வரின் மத்தியில், இருந்த கொஞ்சம் நீரை பெண்ணான லாராவுக்கு தருவதாக முடிவு செய்ய, நிக்கின் திடீர் தடங்கலால், அந்த நீரும் தரையின் வெப்பத்தில் சிதறி பஸ்பமாக போய் விடுகிறது. தண்ணீர் தாகத்தில், மனநிலை பாதிக்கபடும் நிலைக்கு கூட நிக் சென்று விட அவனை சமாளிக்க அடித்து மயக்கத்தில் கொண்டு செல்கிறார் ஷெரீப்.
நிலைமையை சமாளிக்க சற்று தொலைவில் இருக்கும் திரீ போர்க்ஸ் என்ற நகரத்தை அடைய யோசனை தெரிவிக்கும் ஷெரீப், நிமிர்ந்து பார்க்கையில் வாரனின் துப்பாக்கி தன்னை குறி வைப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
சூதாட்ட பணத்தை தேட்டை போட்டதற்காக, வாரன் அந்நகரத்தில் தேடபடும் குற்றவாளி என்று தெரிவிக்கிறான். அதில் இருந்து தப்பவே அவர்கள் ஊரை விட்டு வேக வேகமாக வெளியேற முயல்வதையும் விளக்குகிறான்.
அவருக்கு உரிய நியாயத்தை வாங்கி தருவதாக கூறும் ஷெரீப்பை துப்பாக்கி முனையில் மிரட்டி சலினா பால்ஸுக்கே பிரயாணம் செய்ய வலியுறுத்துகிறான். கோபத்தில் அறிவு மங்கி விட்ட வாரனிடம் வாதம் செய்வதால் பயனில்லை, என்று உ
ணர்ந்து கொள்ளும் ஷெரீப் அவன் சொல்படி பிராயணத்தை தொடர்கிறார்.
வழியில் எதிர்படும் செவ்விந்திய கும்பல் ஒன்றின் தாக்குதலை முறியடித்து, நகரத்தை ஒரு வழியாக அவர்கள் அடையும் நேரத்தில், நிக்கின் அண்ணன்கள் அனுப்பிய கைத்தடிகள் அவர்களை தாக்குகிறார்கள்.
அவர்களை எப்படி சமாளித்தார்கள்? சலீனா பால்ஸில் காத்திருக்கும் நிக்கின் அண்ணன்கள் என்ன திட்டம் வகுத்திருக்கிறார்கள்? தண்ணீரில்லாமல் துவண்டு போன கட்டத்திலும் தன் கணவனை காப்பாற்ற பிரய்யத்தனம் செய்யும் லாராவின் கதி என்ன? அவள் கனவன் காப்பாற்றபட்டானா?
இவர்களுக்கிடையே மாட்டி கொண்டு விழிக்கும் ஷெரீப்பின் நிலை என்ன? நிக்கிற்கு தண்டனை கிடைத்தா? என்ற பல கேள்விகளுக்கு விருவிருப்பாக விளக்கம் சொல்கிறது, இந்த 68 பக்கங்கள் கொன்ட ராணி காமிக்ஸின் இரண்டாம் இதழான கவ்பாய் காவியம்.
தண்ணீரின் முக்கியத்துவம், அதற்காக நடக்கும் போராட்டம் என்று நகரும் இந்த கதையில், வேவ்வேறு வாழ்க்கை முறையில் வளர்ந்த நபர்களின் ஊடே நடக்கும் உணர்ச்சி போராட்டம், நடுநடுவே துப்பாக்கி சண்டைகள் மிகவும் உயிரோட்டத்துடன் அமைந்து இருக்கும்.
மனிதனின் இன்றியமையாத தேவைகளிள் ஒன்றான தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஒருவன் மனநிலை கூட பாதிக்கபடுவான் என்ற உண்மையை உணர்த்தும் கட்டம் அபாரம். கூடவே தவறிழைத்த தன் கணவனை காப்பாற்ற முயலும் பெண்ணாக அறிமுகமாகும லாராவின் கதை சரியாக பின்னப்பட்டிருக்கிறது. கடைசி கட்டத்தில் சலினா பாக்ஸில் நடக்கும் துப்பாக்கி சண்டை திக் திக் ரகம்.
மொத்தத்தில் நான் படித்த முதல் கவ்பாய் கதைகளிள் ஒன்றானது என்பதால் இன்றும் நினைவில் தங்கும் ஒரு புத்தகமாக இது அமைந்திருக்கிறது. திரு. ராமஜெயத்தின் கவிதை வரிகளுடன் பயனித்த இந்த புத்தகம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது என்பதில் எந்த ஐயமுமில்லை. பிற்காலத்தில் வந்த அனைத்து கவ்பாய் கதைகளுக்கும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிய பெருமை இக்கதைக்கே சேரும்.
இந்த கதையின் இருந்த ஒரே குறை, அமெரிக்க மண்ணின் பூர்வ குடிமக்களான செவ்விந்தியர்களை ஏதோ காட்டுமிராண்டிகள் போல முறைபடுத்தி இருப்பது தான். ஆனால் பெரும்பான்மையான கவ்பாய் கதைகளின் சாராம்சமே அதுதான் என்று இருக்கும் போது, இதை மற்றும் குறை கூறுவானேன்?
இந்த கதையின் மூலம் இங்கிலாந்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த
கவ்பாய் பிக்சர் லைப்ரரி (Cowboy Picture Library) என்ற தொகுப்பில் வெளியான ஒரு சித்திரக்கதை.
கிட்டதட்ட 500 புத்தகங்கள் வெளியான அந்த தொடரில் இது எந்த கதை என்று கண்டுபிடிப்பது கஷ்டம் என்றாலும், சற்று தேடுதலில் இந்த இரண்டாம் இதழின் அட்டைக்கான ஒரிஜினல் மாதிரி கிடைத்தது.
ராணி காமிக்ஸின் கண்கவர் அட்டைக்கான காரணம் இப்போது தெரிகிறதா?
அட்டையில் அது நமக்கு மிகவும் பரிச்சயமான கவ்பாய் வீரரான கிட் கார்ஸன் கதை என்று கூறியிருப்பதால், இந்த சித்திரகதை வேறு ஒரு புத்தகத்தின் மொழியாக்கமாக இருக்கலாம். அதை பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கின் காமிக்கியலில் இந்த பதிவின் ஆங்கில ஆக்கம் சில காலம் கழித்து வெளிவரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
பக்க நிரப்பிகளாக கடைசி பக்கங்களிள் வெளியானவை, சென்ற ராணி காமிக்ஸ்
முதலாம் இதழை பற்றிய வாசகர் கடிதம், அக்காலத்தில் மிகவும் பிரபலமான வழி கண்டுபிடிக்கும் விளையாட்டு, மற்றும் குருக்கெழுத்து போட்டி.
அவற்றை இங்கே ரசியுங்கள்.
கூடவே வழக்கம் போல அடுத்த இதழாக வெளிவர இருந்த இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் கதைக்கான விளம்பரம் உள்ளட்டையிலும், இரு விளம்பரங்கள் தாங்கி வெளிவந்த இன்னொரு உள்ளட்டை மற்றும் பின்னட்டையை கண்டு களியுங்கள். புத்தகத்தின் விலையை கட்டுக்குள் வைத்து கொள்ள விளம்பரங்களை உபயோகிப்பதற்கு நிகர் ராணி குழுமம் மட்டுமே, என்பதை மீண்டும் பறைசாற்றும்.
பழைய நியாபகங்கள் துளிர்த்தெழுகிறதா? அந்த சந்தோஷ கட்டத்துடனும், ராணி காமிக்ஸின் 2ம் இதழை பற்றி உங்கள் அனுபவங்களையும், இந்த பதிவினை பற்றிய உங்கள் மேன்மையான விமர்சனத்தையும் படிக்கும் ஆவலுடன், இப்பதிவினை முடித்து விடைபெறுகிறேன்.
அடுத்த ராணி காமிக்ஸ் பதிவில் விரைவில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.